
சிங்கப்பூர், நவம்பர்-21 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் சாமிநாதன் செல்வராஜு வரும் நவம்பர் 27-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுகிறார்.
அந்நாட்டரசு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களில், தட்சிணாமூர்த்தி, பன்னீர் செல்வம் என 2 மலேசியர்களுக்கு அக்குடியரசில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சிறைச்சாலைகள் சேவைத் துறையின் கடிதத்தின் படி, செல்வராஜு குடும்பத்தினருக்கு நவம்பர் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட சந்திப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்திப்புக்கான நேரங்களாக காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளைத் தவறாக பயன்படுத்துவோருக்கான MDA சட்டத்தின் சில பிரிவுகள் சங்கப்பூர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கு, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, சிங்கப்பூர் மேல்முறையீடு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
அச்சட்டமானது, வழக்கின் அடிப்படை உண்மைகள் நிரூபிக்கப்பட்டால், குற்றஞ்சாட்டப்பட்டவர் போதைப்பொருளை வைத்திருப்பதாகவும்
அல்லது அதன் தன்மையை அறிந்திருப்பதாகவும் நீதிமன்றம் கருத அனுமதிக்கிறது.
இந்த கருதுகோளை எதிர்த்து வாதிடலாம், ஆனால் அதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கே உண்டு.
சர்ச்சைக்குரிய இந்த சட்ட விதியால் பாதிக்கப்பட்ட தண்டனை கைதிகளில் சில மலேசியர்களும் அடங்குவர்.
Jumaat Mohamed Sayed, லிங்கேஸ்வரன் ராஜேந்திரன், கே. தட்சிணாமூர்த்தி… தற்போது சாமிநாதன் ஆகியோரே அவர்கள் ஆவர்.



