
வாஷிங்டன், ஜனவரி-3 – ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அமெரிக்கா கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அமைதியான போராட்டக்காரர்களை ஈரான் அரசு வன்முறையால் ஒடுக்கினால், அவர்களுக்கு அமெரிக்கா உதவ முன்வரும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உயர் பணவீக்கம், பொருளாதார நெருக்கடி மற்றும் நாணய மதிப்பு சரிவால் ஈரானில் பல நகரங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சில இடங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரானிய அதிகாரிகள், வெளிநாட்டு தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
தேவையில்லாமல் அமெரிக்கா தலையிட்டால், மத்திய கிழக்கே பற்றி எரியும் என, ஈரானிய உச்சத் தலைவர் Ayatollah Ali Khamenai-யின் மூத்த ஆலோசகர் வாஷிங்டனை எச்சரித்தார்.
ஒரு வார கால சாலை ஆர்ப்பாட்டங்களில் இதுவரை குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



