
கோலாலம்பூர், ஜனவரி-28 – கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து வெளியேற முயன்ற 11 கள்ளக்குடியேறிகள், Ops Taring Nyah 1 சோதனையில் கைதாகியுள்ளனர்.
சிலாங்கூர், சுங்கை பெசார், ஜாலான் அங்கெரிக்கில் உள்ள ஹோட்டல் அறையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 5 பெண்கள் உட்பட 21 வயது முதல் 45 வயதிலான 10 இந்தோனீசியப் பிரஜைகள் கைதாகினர்.
மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், கள்ளக்குடியேறிகளைக் கடத்தி கொண்டு வருபவன் என நம்பப்படும் 38 வயது இந்தோனீசிய ஆடவரும் கைதானார்.
அவர்களில் ஒருவருக்கும் முறையான பயணப் பத்திரம் இல்லையென, பொது நடவடிக்கைப் படையின் கமாண்டர் Jafri Muhamad கூறினார்.
2 வாகனங்கள், கைப்பேசிகள் என மொத்தம் 83,500 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேல் நடவடிக்கைக்காக சபாக் பெர்ணம் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக Jafri கூறினார்.