
போர்டிக்சன், பிப்ரவரி-27 – போர்டிக்சன் Pantai Cermin கடலில் முதலை நடமாடியதாக இதற்கு முன் செய்திகள் வெளியான நிலையில், தற்போது அம்மாவட்டத்திலுள்ள மற்ற கடற்கரைகளிலும் முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வைரலாகி வரும் டிக் டோக் வீடியோக்களில், Pantai Purnama, Pantai Teluk Kemang கடற்கரைகளிலும் முதலைத் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அவ்விரு கடற்கரைகளும் அங்கு சுற்றுப் பயணிகள் அதிகம் கூடும் கடற்கரைகளாகும்.
இந்நிலையில், முதலை தென்பட்ட உண்மையான இடத்தை கண்டறிந்து வருவதாக, PERHILITAN எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் நெகிரி செம்பிலான் கிளை கூறியது.
முதலைகள் எப்போதும் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்குமென, அதன் இயக்குநர் Faizal Izham Pikri கூறினார்.
கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது முதலை வருவது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதை அவர் ஒப்புக் கொண்டார்.
எனவே, மக்களின் கவலையைப் போக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்; Pantai Cermin கடற்கரையில் இரு வாரங்களுக்கு முன்பே பொறி கூண்டு பொருத்தப்பட்டு விட்டதையும் Faisal சுட்டிக் காட்டினார்.