
போர்டிக்சன், செப்டம்பர்-15 – போர்டிக்சனின் பெயரை மாற்றும் யோசனை, அதன் வணிக முத்திரை மதிப்பை குறைத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கக் கூடும் என, மலேசிய சுற்றுலா சம்மேளனம் எச்சரித்துள்ளது.
பெயரை மாற்றுவதற்கு பதிலாக அடிப்படை வசதிகள், கலாச்சார மரபு மற்றும் சுற்றுலா வளங்களை மேம்படுத்த வேண்டுமென, அச்சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீ கணேஷ் மிச்சேல் கூறினார்.
திடீர் பெயர் மாற்றம் என்பது விளம்பரத் திட்டங்களை சீர்குலைத்து, சுற்றுலாப் பயணிகளை குழப்பத்துக்குள்ளாக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இதனால் மீண்டும் மீண்டும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறையக்கூடும்; தவிர தேவையற்ற சந்தைப்படுத்தல் மற்றும் _rebranding_ எனப்படும் மறுதோற்ற செலவுகளும் அதிகரிக்கும் என்றார் அவர்.
காலனித்துவ ஆட்சியின் அடையாளமாக விளங்குவதால் போர்டிக்சனை Pantai Dermaga என பெயர் மாற்றும் சில அரசு சாரா அமைப்புகளின் கோரிக்கையை, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் முன்னதாக நிராகரித்தார்.
அந்தக் கடற்கரை நகரம் ஏற்கனவே பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது; எனவே மாற்றம் தேவையில்லை என அவர் வலியுறுத்தியிருந்தார்.