
கோலாலம்பூர், ஜனவரி-27-கோலாலம்பூர், புத்ராஜெயாவை அடுத்து நாட்டின் மூன்றாவது தலைநகராக போர்னியோ தீவில் ஒரு நகரை அமைக்க வேண்டும் என, பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரொட்சியா இஸ்மாயில் பரிந்துரைத்துள்ளார்.
தற்போது கோலாலம்பூர் – அரசியலமைப்பு மற்றும் அரசாட்சி தலைநகராகவும், புத்ராஜெயா – நாட்டின் நிர்வாக மையமாகவும் விளங்குகின்றன.
இவற்றைப் பூர்த்திச் செய்யும் வகையில், போர்னியோ தீவில் கூட்டரசு நீதித்துறை மற்றும் அனைத்துலக நடுவர் மன்றங்களுக்கான மையமாக புதியத் தலைநகரம் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இதன் மூலம் சபா, சரவாக் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
தவிர, கூட்டரசு நிறுவனங்களைப் பிரித்து அமைப்பது, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெரிசலைக் குறைக்கும் என்பதோடு, கிழக்கு மலேசியாவுக்கு தேசிய ஆட்சியில் முக்கிய பங்கு வழங்கும் என்றும் ரோட்சியா மக்களவையில் வலியுறுத்தினார்.
மூன்றாவது தலைநகரமானது பாதுகாப்பு நிறுவனங்கள், எல்லைக் கட்டுப்பாடு, குடிநுழைவு சேவைகள், தூதரக மையங்கள் மற்றும் வட்டார சமூக-பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புகள், குறிப்பாக புருணை-இந்தோனேசியா-மலேசியா-பிலிப்பின்ஸ் கிழக்கு ஆசியான் வளர்ச்சிப் பகுதி ஆகியவற்றை தன்னகத்தே வைத்திருக்க முடியும் என அவர் கூறிக் கொண்டார்.
Pretoria, Cape Town, Bloemfontein என 3 தலைநகரங்களைக் கொண்ட தென் ஆப்ரிக்காவுக்கு ஈடாக மலேசியா விளங்கும் என்றார் அவர்.
புதிதாய் தோன்றினாலும் ரொட்சியாவின் பரிந்துரை மலேசியா போன்ற சிறிய நாடுகளுக்கு எந்தளவு நடைமுறைக்கு சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.



