
கோம்பாக், அக்டோபர்-6,
ஒரு கால்பந்து வீரரின் மாமியார் உட்பட 5 பேர் போலிக் கடப்பிதழ் முத்திரை வழக்கு தொடர்பில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் 4 பாகிஸ்தானிய ஆடவர்களும், அந்த உள்ளூர் மாதுவும் கைதாகியதாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அரிஃபின் முகமட் நாசிர் தெரிவித்தார்.
அனைத்து சந்தேக நபர்களும் வரும் புதன்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மோசடிக் குற்றங்களுக்கான 420-ஆவது பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
கோம்பாக் வட்டாரத்தில் பல மாதங்களாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் ஆவணப் போலி கும்பல் குறித்த உளவுத் தகவலின் விளைவாக, ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அதன் போது, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளின் அதிகாரப்பூர்வ முத்திரைகள் கைப்பற்றப்பட்டன; இவை, பயண ஆவணங்களைப் போலியாக உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக போலீஸ் சந்தேகிக்கிறது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளை, இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.