
புத்ராஜெயா, ஜனவரி 9 – போலி மைகாட் (MyKad) பயன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக தேசிய பதிவு துறையான JPN கடுமையாக எச்சரித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் மலேசிய குடிமக்களாக நடித்து, பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி நாட்டிற்குள் மிக எளிதில் நுழைந்து விட முடியும்.
போலி அடையாளங்கள் தீவிரவாதிகள், சர்வதேச குற்றவாளிகள் மற்றும் மனிதக் கடத்தல் சிண்டிகேட்டுகளால் தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும் இது விசாரணை மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் JPN தலைமை இயக்குநர் Datuk Badrul Hisham Alias கூறியுள்ளார். .
அது மட்டுமின்றி போலி மைகாட் வைத்திருப்போர் அரசு உதவிகள், மானியங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மற்றும் கல்வி போன்ற சலுகைகளை தகுதி இல்லாமல் பெற கூடிய வாய்ப்பும் அதிகமுள்ளது.
இதனைத் தடுக்கும் பொருட்டு, JPN, போலீஸ், குடிநுழைவுத் துறை மற்றும் SPRM ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. போலி மைகாட் பயன்படுத்துதல் அல்லது வைத்திருக்கும் குற்றத்திற்கு, அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 20,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.



