
பேங்கோக், ஜனவரி-23-மலேசியாவைச் சேர்ந்த ஓர் ஆடவரும் தாய்லாந்து குடியுரிமை கொண்ட அவரின் மனைவியும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் தாய்லாந்து போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தாம்பெட்டமின் (methampheamine) போதைப்பொருள், தெற்கு தாய்லாந்தின் சும்ஃபோன் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது.
வடக்கு தாய்லாந்திலிருந்து தெற்கே பயணம் செய்துகொண்டிருந்த இத்தம்பதி, குடும்பமாக பயணம் செய்வது போல் காட்டுவதற்காக 3 குழந்தைகளை உடன் அழைத்துச் சென்றதும் அம்பலமானது.
200 கிலோ கிராமுக்கும் அதிகமான அந்த போதைப்பொருள் வாகனத்தின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
2 வாகனங்கள் மற்றும் பல கைபேசிகளும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம், தற்போது தாய்லாந்தின் கடுமையான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.



