
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – சட்ட அமுலாக்கத்தை எதிர்க்க மலேசியர்களைத் தூண்டி விடும் வகையில், சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
அது குறித்து செவ்வாய்க்கிழமை புகார் கிடைத்ததாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.
தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
@strangewizard999 என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட அந்த 29 வினாடி வீடியோ முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில், வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் ஓர் ஆடவர், மலேசியர்கள் போலீஸ்காரர்களைத் தாக்க வேண்டும் என்றும், அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக தீவிரமானப் போக்கைக் கடைபிடிக்க வேண்டுமென்றும் தூண்டி விடுகிறார்.
இந்நிலையில் அவ்விவகாரம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் கையிலெடுத்துள்ளது.