ஷா ஆலாம், நவம்பர்-8 – சிலாங்கூரில் நெடுஞ்சாலைகளிலும் முக்கியச் சாலைகளிலும் போலீஸ்காரர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து, மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் கொள்ளையிட்டு வந்த 10 ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
வாகனங்களை இழுத்துச் செல்லும் டிரக் வாகன ஓட்டுநர்கள், பொருட்களைப் பட்டுவாடா செய்பவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகிய வேலைகளிலிருக்கும் அவர்கள் அக்டோபர் 20-ஆம் தேதி கைதாகினர்.
சில சம்பவங்களில் மோட்டார் சைக்கிள்களையே அவர்கள் கொள்ளையிட்டுள்ளதாக, சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி தெரிவித்தார்.
25 முதல் 39 வயதிலான சந்தேக நபர்கள், சோதனை என்ற பெயரில் முதலில் மோட்டார் சைக்கிளோட்டிகளை நிறுத்தி அவர்களின் உடமைகளைத் திருடுகின்றனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள்களையே அபகறித்து விடுகின்றனர்.
அப்படி அபகறிக்கப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்கும்பல் கைதாகியிருப்பதால், சிலாங்கூரில் 10 கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக டத்தோ சசிகலா தேவி சொன்னார்.