
கிள்ளான், ஜன 27 – 37 வயது குமஸ்தாவை கற்பழித்தது, கூட்டாக சேர்ந்து கொள்ளையிட்டது மற்றும் போலீஸ்காரர்போல் நடித்ததாக
P-ஹெய்லிங் ஓட்டுநர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இரண்டு வாரத்திற்கு முன் Kawasan 18, Jalan Tapah என்ற கார் நிறுத்துமிடத்தில் அதிகாலை 2 மணியளவில் 32 வயதுடைய அந்த ஆடவன் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்ததோடு அப்பெண்ணுக்கு காயம் ஏற்படுத்தியதாக நீதிபதி ஷரிபா ஹஸ்சின்டி சைட் ஒமார் ( Sharifah Hascindie Syed Omar ) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
10 ஆண்டு மற்றும் 30 ஆண்டுகளுக்கிடையே சிறை தண்டனை விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (2) இன் கீழ் அந்த நபருக்கு எதிராக கற்பழிப்பு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
மேலும் பலகாரம் விற்பனைசெய்யும் மற்றொரு 34 வயதுடைய நபருடன் கூட்டாக சேர்ந்து அதே தினத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கைதொலைபேசி மற்றும் 110 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றையும் கொள்ளையிட்டதாக அந்த நபர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இதனிடையே அந்த இரண்டு நபர்களும் போலீஸ்காரர்களாக நடித்ததாக மாஜிஸ்திரேட் A.கார்த்தியாயினி முன்னிலையில் மற்றொரு நீதிமன்றத்தில் கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது.
கற்பழிப்பு குற்றச்சாட்டிற்கு 10,000 ரிங்கிட் ஜாமினும் , கூட்டாக கொள்ளையிட்ட குற்றத்திற்கு 7,000 ரிங்கிட் ஜாமினும் P-ஹெய்லிங் ஓட்டுநருக்கு அனுமதிக்கப்பட்டது.
போலீஸ்காரராக நடித்த குற்றத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் 3,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் மார்ச் 5ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.



