கோலாலம்பூர், அக்டோபர்-3 – கையில் காயம் ஏற்படும் அளவுக்கு போலீசாரால் முரட்டுத்தனமாக கைதுச் செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டதாக முன்னாள் கடற்படை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் 23-ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஈப்போ லிட்டல் இந்தியா வாழை இலை உணவகமருகே அச்சம்பவம் நிகழ்ந்ததாக, 48 வயது சோமசுந்தரம் முனியாண்டி தெரிவித்தார்.
“தேநீர் அருந்தி விட்டு காரை நோக்கி போகையில், அடையாளம் தெரியாத 3 இந்திய ஆடவர்கள் காரை எடுக்க விடாமல் என்னைத் தடுத்தனர். கேட்டால், Affin Bank-கிலிருந்து காரை இழுத்து செல்ல வந்திருப்பதாகக் கூறியதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டினர்”
பிறகு அங்கு வந்த ஈப்போட் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்கள் என்னிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டு விட்டு, இரு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டு, போலீஸ் காரில் பிடித்துத் தள்ளினர்.
போலீஸ் நிலையம் சென்ற போது, அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம், போலீஸ் லஞ்சம் வாங்குவதாக நான் கூறியதாக அந்நால்வரும் பச்சையாகப் பொய் சொன்னார்கள்.
குற்றத்தை ஒப்புக் கொள்வில்லையென்றால் லாக்கப்பிலேயே அடிபட்டு சாக வேண்டியது தான். மீறி புகார் செய்தால் உன்னை கைதுச் செய்வோம் என்றும் அந்த இன்ஸ்பெக்டர் தன்னை மிரட்டியதாக, 22 ஆண்டு காலம் கடற்படை உறுப்பினராக சேவையாற்றியுள்ள அவர் சொன்னார்.
எனவே, தனது புகாரை வெளிப்படையாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, தேசியப் போலீஸ் படைத் தலைவர் மற்றும் புக்கிட் அமான் நெறிமுறை மற்றும் தர நிர்ணய பின்பற்றல் துறையிடம் வழங்கிய மகஜரில் சோமசுந்தரம் வலியுறுத்தினார்.
மலேசிய மக்கள் கட்சியின் உதவித் தலைவர் எஸ். மாணிக்கவாசகம் உதவியுடன் அம்மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.