நெத்தன்யாஹுவிடம் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்திய பைடன்; பதவி விலகுவதற்குள் தீர்வு எட்ட திட்டம்

வாஷிங்டன், ஜனவரி-13, ஜோ பைடன் தனது அதிபர் பதவிக் காலத்தை ஜனவரி 20-ஆம் தேதி நிறைவுச் செய்வதற்கு முன்பாக, காசாவில் போர் நிறுத்த மற்றும் பிணைக் கைதிகள் உடன்பாட்டை எட்ட அமெரிக்காவும் இஸ்ரேலும் முயன்று வருகின்றன.
பாலஸ்தீனத்தில் போரை நிறுத்தி பிணைக் கைதிகளை விடுப்பிப்பது குறித்து விவாதிப்பதற்காக, பைடனும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
காசாவில் உடனடி போர்நிறுத்தம் செய்யப்பட்டு மனிதநேய உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதை நெத்தன்யாஹுவிடம் பைடன் வலியுறுத்தியுள்ளார்.
அதனை ஏற்றுக் கொண்ட நெத்தன்யாஹு, பிணைக் கைதிகள் உடன்பாட்டை இறுதிச் செய்ய தற்போது கட்டார், டோஹாவில் இஸ்ரேலின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முகாமிட்டிருக்கும் தகவலை, பைடனிடம் தெரிவித்தார்.
லெபனானில் ஏற்பட்ட போர் நிறுத்தம், சிரியாவில் அதிபர் அசாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பு, மத்தியக் கிழக்கில் ஈரானின் ஆதிக்கம் வலுவிழந்து வருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
பைடன் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்குள் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக, அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் கூறியுள்ளார்.
2023 அக்டோபரில் ஹமாஸ் போராளிகள் காசாவின் எல்லைகளைத் தாண்டித் தாக்குதல் நடத்தி 1,200 பேரைக் கொன்று 250 க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசாவில் தனது தாக்குதலைத் தொடங்கியது.
அப்போதிருந்து, காசாவில் 46,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் காசாவில் மனிதநேய நெருக்கடி ஏற்பட்டு, அதன் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.