
புத்ராஜெயா, மார்ச்-28- நாட்டின் நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையே அடித்தளமாக இருப்பதால், மக்களைப் பிரிக்க முயலும் எந்தவொரு குரல்களையும் நாம் நிராகரிக்க வேண்டும்.
KPKT எனப்படும் வீடமைப்பு- ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அதனை வலியுறுத்தினார்.
KPKT-யின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற முழக்கத்திற்கு ஏற்ப, மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மை நாட்டின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்.
அதனால் தான் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த KPKT ஊழியர்களுடன் சேர்ந்து, ஹரி ராயா, தீபாவளி, சீனப் புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளை அமைச்சில் கொண்டாடுவதில் பெருமையடைகிறோம் என்றார் அவர்.
ஒவ்வொரு மலேசியருக்கும், இந்த முக்கியமான பண்டிகைகளை அமைதியிலும் நல்லிணக்கத்திலும் ஒன்றாகக் கொண்டாடும் வாய்ப்பு ஓர் ஆசீர்வாதமாகும் என அவர் வருணித்தார்.
இந்த புனித இரமலான் மாதம் முழுக்க, பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் உணர்வை வெளிப்படுத்தினோம்.
தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து சாஹூர் எனப்படும் நோன்புத் தொடங்குவதற்கு முன்பான கடைசி உணவுண்ணல், பேரீச்சம் பழங்களை விநியோகிப்பதற்காக அமைச்சின் துறைகளுக்கு திடீர் வருகை, ஹரி ராயா இஹ்யா எனப்படும் சமய மற்றும் நல்லெண்ண நிகழ்வுகளும் அவற்றில் அடங்கும்.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, KPKT வரவேற்புக் கூடத்தையும் நோன்புப் பெருநாள் கருப்பொருளுடன் அலங்கரித்துள்ளோம் என அமைச்சர் சொன்னார்.
முன்னதாக, பொதுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, கோலாலம்பூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுடன் சாஹூர் உணவு அமர்வையும் அவர் நடத்தினார்.
பண்டிகைக் காலத்தில் Ops Siaga மூலம் பொதுப் பாதுகாப்பை உறுதிச் செய்ய ஏதுவாக, அதன் 70 சதவீத பணியாளர்களின் விடுமுறை முடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், R&R பகுதிகளில் பொது கழிப்பறைகளை மேம்படுத்த தனியார் துறையுடன் ஒத்துழைப்பது போன்ற முயற்சிகளை KPKT முடுக்கி விட்டுள்ளது.
பண்டிகைக்காகப் பொதுமக்கள் வீடு திரும்பும் போது சுத்தமான மற்றும் வசதியான வசதிகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்