
ரங்கூன், மார்ச்-28- தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் அதிரும் அளவுக்கு நேற்று மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில், இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மியன்மாரில் 144 பேரும், தாய்லாந்தில் 10 பேரும் உயிரிழந்தனர்.
காயமடைந்தோரின் எண்ணிக்கை 732 பேராகப் பதிவாகியுள்ளது.
பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென்பதால், அனைத்துலக உதவிகளை எதிர்பார்ப்பதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் Min Aung Hlaing கூறினார்.
பழைய அரண்மனை, புத்த ஆலயம், நெடுஞ்சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவையும் மியன்மாரில் இடிந்து விழுந்தன.
இதுவரை இவ்வளவு வலுவான பூகம்பத்தை தான் பார்த்ததில்லை என ஜெனரல் Min சொன்னார்.
மத்திய மியன்மாரில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.7-ழாகப் பதிவாகிய வலுவான நில நடுக்கம், அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நில நடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தலைநகர் பேங்கோக்கில் கட்டுமானத்தில் உள்ள 30 மாடி கட்டடம் சரிந்து விழுந்தது உட்டட ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.
சரிந்த கட்டடத்தினுள் 80-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வானுயரக் கட்டடமொன்று குலுங்கியதில் அதன் உச்சியிலிருந்த நீச்சல் குளத்தின் தண்ணீர் கீழே கொட்டுவதும், மக்கள் தலைத் தெறிக்க ஓடும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
பெரும் சேதத்தை அடுத்து மியன்மாரிலும் பேங்கோக்கிலும் பேரிடர் அவசரகாலம் அறிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் உரிய உதவிகளை வழங்கத் தயாரென பிரதமரும் ஆசியான் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.