Latestமலேசியா

மக்கள் நல சேவை கழகம் ஏற்பாட்டில் தேசிய எந்திரவியல் போட்டி; பினாங்கு சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி வாகை

கோலாலாம்பூர், நவம்பர்-26 – தமிழ்ப் பள்ளிகளுக்கான எந்திரவியல் போட்டி மலேசிய மக்கள் நல சேவைக் கழகத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Celik Robotik என்ற பெயரில் தேசிய ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில்,  9 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களும் 100 ஆசிரியர்களும் பங்கெடுத்தனர்.

ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் 1 ஆசிரியர் என மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பங்கேற்கும் தனித்துவமான வகையில் போட்டி அமைந்ததாக, மலேசிய மக்கள் நல சேவைக் கழகத்தின் தலைவரும் போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான கந்தன் சாமிநாதன் தெரிவித்தார்.

4,5,6- ஆம் ஆண்டு மாணவர்களுக்கான RBT எனும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பாடத்தை ஒட்டி இப்போட்டியின் கேள்விகள் அமைந்திருந்தன.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பங்களில் பிந்தங்கி விடக் கூடாது என்ற நோக்கத்தோடு இப்போட்டி நடத்தப்பட்டதாக கந்தன் சொன்னார்.

மொத்தமாக 20 குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், போட்டி நீதிபதிகளை கவர்ந்து பினாங்கு சுங்கை ஆரா தமிழ்ப் பள்ளி குழுவினர் முதலிடத்தில் வாகை சூடினர்.

பரிசுத் தொகையாக 3,250 ரிங்கிட் ரொக்கம்,  பதக்கம் மற்றும் ‘robotic kit’ உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

இரண்டாமிடத்தைப் பிடித்து பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 2,750 ரிங்கிட் பரிசை வென்றனர்.

2,250 ரிங்கிட் ரொக்கப் பணத்திற்குரிய மூன்றாம் இடத்தை மலாக்கா, பாத்தாங் தமிழ்ப் பள்ளிக் குழுவினர் வென்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த ஒம்ஸ் தியாகராஜன் அறவாரியத்தின துணைத் தலைவர் திலகன் அருணாசலம்  மற்றும் வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

அறிவியல் உலகில் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் சிறந்து விளங்குவதை உறுதிச் செய்வதற்குண்டான முக்கிய முன்னெடுப்பாக இந்த எந்திரவியல் போட்டி திகழ்கிறது. 

இப்போட்டியை வரும் ஆண்டுகளிலும் நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!