
புத்ராஜெயா, ஜூலை-21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன.
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.5% என ஊக்கமளிக்கும் அடைவுநிலையைப் பதிவுச் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளதே, அதற்கு முக்கியச் சான்றாகும்.
வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அவ்வாறு கூறியுள்ளார்.
4.5% அளவில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் விரிவான அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் நேர்மறையான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன என்பதற்கான தெளிவான அறிகுறி என்றார் அவர்.
உலகளாவிய அழுத்தங்கள் அதிகரித்து வரும் போதிலும், நிலையான உள்நாட்டு தேவை, பயனீட்டாளர் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவை அரசாங்கத்தின் அணுகுமுறையின் அடைவுநிலையைப் பிரதிபலிக்கின்றன.
குறிப்பாக, அடிப்படை ரஹ்மா உதவித் திட்டம், ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகள் மூலம் மக்களின் வருமானம் மற்றும் வாங்கும் சக்தியை அதிகரிக்க உதவியது.
மடானி அரசாங்கம் எப்போதும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதிச் செய்வதிலும், அனைத்துப் பிரிவு மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பதிலும் உறுதியாக உள்ளது என்றார் அவர்.
இவ்வேளையில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை, குறிப்பாக சொத்துடைமைத் துறையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, OPR வட்டி விகிதத்தை 2.75% ஆகக் குறைத்த பேங்க் நெகாரா மலேசியாவின் முடிவையும் அமைச்சர் வரவேற்றார்.