
ஷா ஆலாம், ஜூலை-1 – பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடிப்புக்கு, மண்ணுக்குள் ஏற்பட்ட நகர்வே காரணமாகும்; மாறாக மண்ணின் மேற்பரப்பில் நிகழ்ந்த செயல்பாடுகள் அல்ல.
DOSH எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் பெட்ரோலியம் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஹுஸ்டின் சே அமாட் அதனை உறுதிப்படுத்தினார்.
ஏப்ரல் 1 சம்பவத்தின் போது, குழாயின் தரைப் பகுதி மென்மையாகவும் ஈரமாகவும் இருந்தது அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
பயன்படுத்தப்பட்ட எரிவாயு குழாய், நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களைப் பூர்த்திச் செய்திருந்ததும் தொழில்நுட்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
“ஆக, குழாயின் எடை மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்குக் குழாயின் அடியில் உள்ள மண் போதுமானதாக இல்லாததால், அது நிலையற்றதாகி, கசிந்து இறுதியில் வெடித்தது” என்றார் அவர்.
3 மாத முழுமையான ஆய்வில் இது கண்டறியப்பட்டதாக, நேற்று ஷா ஆலாமில் நடைபெற்ற
கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
அவ்வெடிப்புச் சம்பவத்துக்கு நாசவேலையோ அலட்சியப் போக்கோ காரணமல்ல என, போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஹரி ராயா சமயத்தில் ஏற்பட்ட அந்த எரிவாயு குழாய் வெடிப்பில், 30 மீட்டர் உயரத்தில் வானில் தீம்பிழம்புகள் ஏற்பட்டு, சுற்றுப்பகுதிகளில் வெப்பநிலை 1,000 செல்சியஸ் பாகை வரை எட்டியது.
150 பேர் வரை காயமேற்பட்டு சிகிச்சைப் பெற்றனர்; ஆனால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
81 வீடுகள் முழு சேதமடைந்ததும் குறுப்பிடத்தக்கது.