Latestமலேசியா

மதுபோதை விபத்துகளுக்கு மரண தண்டனை தேவையில்லை; அந்தோணி லோக் திட்டவட்டம்

கோலாலாம்பூர், ஏப்ரல்-13-மதுபோதையில் வாகனமோட்டி மரண விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடப்பிலுள்ள சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ், குற்றங்களின் கடுமைக்கு ஏற்ப கொலைக் குற்றம் சுமத்தப்படலாம் என்பதால், மரண தண்டனை தனியாகத் தேவையில்லை என்றார் அவர்.

அண்மையக் காலமாக, மதுபோதையால் ஏற்பட்ட மரண விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பரவலாக எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு அவர் பதிலளித்தார்.

பல கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனையை மலேசியா ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ள நிலையில், குடிபோதை விபத்துகளுக்கு அதனை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் அரசுக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு விரைவாகக் கிடைப்பதை உறுதிச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீண்ட கால சிவில் நீதிமன்ற விசாரணைகள் இன்றி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணம் வழங்குவதே தற்போதைய முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திருத்தங்கள் ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!