
கோலாலம்பூர், மார்ச் 15 – மத வெறுப்பு அல்லது இனத் துவேசத்தைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் அமலில் இருக்கும் சட்டம் அர்த்தமற்றதாகிவிடும் என இலக்கவியல் அமைச்சர் – கோபிந் சிங் கேட்டுக் கொண்டார்.
மதம் அல்லது இன வெறுப்பைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
பிற மதத்தை அவமதிப்பதை மன்னிக்க முடியாது. அதோடு, பிற மதத்தை அவமதிப்பவர்கள் அதற்கான விளைவினை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்கிற வலுவான செய்தியை பிறருக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும் , மேலும் இதுபோன்ற வழக்குகளில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
போலீசில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிற மதத்தை அவமதிக்கும் இது போன்ற பதிவுகளையும் அறிக்கைகளையும் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறினார். அவர்கள் மீது உடனடியாகச் சட்டம் பாய வேண்டும் என அவர் வலியுறுத்தினானார்.