
கோலாலம்பூர், ஆகஸ்ட்-10 – பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் நேற்று தலைநகர் Dataran Merdeka-வில் நடைபெற்ற Malaysia Bangkit untu Gaza அமைதிப் பேரணியில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்துகொண்டனர்.
H4G எனப்படும் Sekretariat Humanity 4 Gaza செயலகம் 20 அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பங்கேற்பாளர்கள், தேசியப் பள்ளிவாசல், மஸ்ஜித் ஜாமேக், சோகோ பேரங்காடி ஆகிய இடங்களிலிருந்து ஊர்வலமாக Dataran Merdeka நோக்கிச் சென்றனர்.
பாலஸ்தீன கொடிகளைப் பறக்க விட்டு, ‘Bebas Palestin’ ‘Hancur Israel’ போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.
மழைக்கும் மத்தியில் மக்கள் திரளாக கலந்துகொண்டு இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்தனர்.
பங்கேற்பாளர்களில் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பேரணி குறித்து பகிர்ந்துகொண்டனர்.
காசா மக்களின் துயர் குறித்த கவிதைப் படைப்பு, மக்ரிப் மற்றும் ஹஜாட் தொழுகை, ஆய்வரங்கு, காசாவிலிருந்து நேரலை என பல்வேறு அங்கங்களுடன் இரவு 11 மணிக்கு பேரணி நிறைவுப் பெற்றது.