
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- போரினால் சீரழிந்த காசா மக்களுக்கு ஆதரவுத் தெரிவிக்கும் நோக்கில், H4G எனும் Humanity for Gaza அரசு சாரா அமைப்பு, வரும் ஆகஸ்ட் 9 சனிக்கிழமை அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பேரணியில் இன சமய வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்திற்கு ஆதரவாக மலேசியர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
கோலாலாம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில் (Dataran Merdeka) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கும் இப்பேரணிக்கு, உள்ளூரைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் வற்றாத ஆதரவுக் கிடைத்துள்ளது.
எனவே, பல்லாயிரக்கணக்கான பல்லின பல்சமய மலேசியர்கள் அதில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக, H4G இயக்குநர் டத்தோ மொஹமட் அப்பாண்டி மொஹமட் (Datuk Mohd Apandi Mohamad) தெரிவித்தார்.
இஸ்ரேலின் அட்டூழியத்தால் இதுவரை 60,000 -க்கும் மேற்பட்ட அப்பாவி காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொடூரம் ஒரு பக்கமிருக்க, பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்று சேருவதையும் இஸ்ரேல் தடுக்கப் பார்க்கிறது.
மனிதநேய உதவிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை இஸ்ரேல் வெடி வைத்து தகர்ப்பதால், பசி பட்டினியால் இறக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
மே 27 வரைக்குமான நிலவரப்படி, உணவுத் தேடி அலைந்த போது 1,373 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐநா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
GHF உணவு விநியோக மையத்திற்கு அருகில் 859 பேரும், செல்லும் வழியில் 514 பேரும் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள்.
மனிதநேயமற்ற இச்செயலுக்கு எதிராக அனைத்துலகச் சமூகம் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
இஸ்ரேலின் கொடுமையைக் கண்டிக்கும் அதே வேளை, அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அதனுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதோடு, பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் இப்பேரணி வற்புறுத்துகிறது.
எனவே, மனிதநேய அடிப்படையில் அநியாயத்துக்கு குரல் கொடுக்கும் வகையில் திரண்டு வந்து ஆதரவளிக்குமாறு, இன -மத வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் H4G அழைப்பு விடுத்துள்ளது.