
பெய்ஜிங், ஜனவரி-31 – மனிதன் செய்யும் பல வேலைகளுக்கு பழகி விட்ட humanoid robots எனப்படும் மனித உருவ ரோபோக்கள், அடுத்து மரத்தோன் போட்டியிலும் கால் பதிக்கவிருப்பதை நாம் காணவிருக்கிறோம்.
ஆம், வரும் ஏப்ரல் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மனித ரோபோக்கள் பங்கேற்கும் உலகின் முதல் அரை மரத்தோன் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்கவுள்ள தனித்துவமான அப்போட்டியில், அவர்களுக்குப் போட்டியாக களத்தில் ரோபோக்கள் ஓடவிருக்கின்றன.
மரத்தோன் பந்தயத்திற்குத் தகுதி பெற, ரோபோக்கள், மனித உருவத்தில் இருக்க வேண்டும் என்பதுடன் இரண்டு கால்களில் ஓடும் திறனைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
தவிர, 50 சென்டி மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்டிருக்க வேண்டும்; முக்கியமாக, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட வேண்டும் அல்லது முழுக்க முழுக்க சொந்தக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்.
இது ஏதோ ஒரு பெயரளவிலான அறிவிப்பு மட்டுமே என நீங்கள் நினைத்தால் அது தவறு; காரணம், பெய்ஜிங் ரோபாட்டிக்ஸ் புத்தாக்க மையமான Tiangong-ங்கில் உருவாக்கப்பட்ட ஒரு மனித உருவ ரோபோ, மரத்தோன் போட்டியில் பங்கேற்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
அதிகபட்சமாக மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்ட இந்த ரோபோ தான், தற்போது உலகின் மிக வேகமான மனித உருவ ரோபோ ஆகும்.
மனித உருவ ரோபோக்கள் துறையில் சீனா தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்த விரும்புவதற்கான தெளிவான எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு.
குறிப்பாக, மெரிக்காவுக்கு இணையாக இத்துறையில் தன்னை அது நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறது.