
நாகோயா, நவம்பர்-9,
ஜப்பானின் நாகோயா நகரத்தில், தனது மனைவி கொலை செய்யப்பட்ட அடுக்குமாடி வீட்டை 26 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்த கணவரின் முயற்சி வீண் போகவில்லை.
உண்மை ஒருநாள் வெளிவரும் என்ற நம்பிக்கையோடு சதோரு தகாபா (Satoru Takaba) எனும் அவ்வாடவர், இத்தனை ஆண்டுகளாக இரத்தக்கறை உட்பட அவ்வீட்டையே சுத்தம் செய்யாமல் வைத்திருந்தார்.
காலி வீட்டுக்கு அவர் இதுவரை கட்டிய வாடகை மட்டுமே 145,000 டாலராகும்.
இந்நிலையில், கொலையாளியான 69 வயது குமிகோ யாசுஃபுக்கு (Kumiko Yasufuku) யாரும் எதிர்பாரா வகையில் அக்டோபர் 30-ஆம் தேதி போலீஸில் சரணடைந்தார்.
அவர் வேறு யாருமல்ல; இடைநிலைப்பள்ளியில் சதோருவுடன் ஒரே வகுப்பில் படித்து, அவரை ஒருதலைப்பட்சமாக காதலித்த பெண்ணாவார்.
ஒரு கட்டத்தில் தனது காதலை குமிகோ வெளிப்படுத்த, சதோரு நிராகரித்து விட்டார்.
அந்த கோபத்தை மனதில் வைத்தே 1999-ல், சதோருவின் மனைவியை கழுத்தில் பல முறை குத்தி குமிகோ கொலைச் செய்துள்ளார்.
100,000 போலீஸார், 5,000 சாட்சிகள் என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டாலும் வழக்கு முடிவுக்கு வராமலிருந்தது.
இப்போது, சதோரு மனைவியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் கொலையாளி சிக்கியுள்ளது ஜப்பானிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.



