Latestமலேசியா

மருந்துகளின் விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைப்பதை எதிர்த்து புத்ராஜெயாவில் மருத்துவர்கள் அமைதிப் பேரணி

புத்ராஜெயா, மே-6,  மருந்து மாத்திரைகளின் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் ‘சட்டம் 723’-க்கு எதிராக புத்ராஜெயாவில் இன்று கண்டன பேரணி நடைபெற்றது.

புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா சதுக்கத்தில் தொடங்கிய அப்பேரணிக்கு மலேசிய மருத்துவச் சங்கமான MMA ஏற்பாடு செய்திருந்தது.

அதன் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் Dr திருநாவுக்கரசு ராஜூ தலைமையில், 11 மருத்துவ அமைப்புகள் இப்பேரணியில் பங்கேற்றன.

கெடா, கிளந்தான், மலாக்கா, சரவாக், சபா, திரங்கானு என தொலை தூரங்களிலிருந்தும் சுமார் 500க்கும் அதிகமானோர் அப்பேரணியில் கலந்துகொண்டனர்.

ஊர்வலமாகச் சென்று பிரதமர் துறையில் மகஜர் வழங்குவதே அதன் நோக்கமாகும்.

“எங்களால் விலைப்பட்டியல்களைக் காட்சிக்கு வைக்க முடியும்; அதுவொரு பிரச்னையே அல்ல; ஆனால், வெளியில் கட்டுபாடற்ற முறையில் மருந்துகளின் விலைகள் உள்ளன; அவற்றை அரசாங்கம் எப்படி கட்டுப்படுத்தப் போகிறது?” என திருநாவுக்கரசு கேள்வி எழுப்பினார்.

மருத்துவத் தொழில்துறை ‘சட்டம் 586’ வழியாகவே ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும்; ‘சட்டம் 723’ மூலமாக அல்ல என்ற தங்களின் நிலைப்பாட்டை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.

இதுவரை 11,000 கிளினிக்குள் மூடு விழா கண்டுள்ளன; இது, நீண்ட கால அடிப்படையில் நாட்டின் சுகாதாரப் பராமரிப்புச் சேவையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஏற்கனவே சுமையை எதிர்நோக்கியுள்ள பொது சுகாதாரச் சேவைகளுக்கு இது கூடுதல் சுமையாக அமையுமென திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.

இவ்வேளையில், கிளினிக்குள் ஒன்றும் சில்லறை வணிகமல்ல எனக் கூறிய மலேசியப்- பல் மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த Dr நெடுஞ்ச்செழியன் வேங்கு, இந்த ‘சட்டம் 723’-க்குப் பதிலாக வேறேந்த சட்டத்தையும் தாங்கள் எற்றுக் கொள்ளத் தயாரென்றார்.

MMA-வின் முன்னாள் தலைவரான டத்தோ Dr ஞான பாஸ்கரனும், மருந்து மாத்திரைகளின் விலையர்வைச் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே பிரதமர் துறையை சென்றடைந்ததும், மகஜர் கொடுக்க திருநாவுக்கரசு தலைமையில் 10 பேர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பயனீட்டாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில், தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளின் விலைப் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!