
அலோர் காஜா, மார்ச்-19-மலாக்காவில் கடந்த மாதம் அல் குர் ஆனை மிதித்த ஆடவருக்கு 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை அவமதிக்கும் நோக்கில் அவ்வாறு செய்து, பிப்ரவரி 28-ஆம் தேதி அந்த வீடியோவைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றியதை, 41 வயது Amir Abdul Malik அலோர் காஜா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 295-ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
ஒரு முஸ்லீமே தனது மதத்தை அவமதித்திருப்பதால், அதன் கடுமைக்கு ஏற்ப தக்க தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு நீதிமன்றத்தைக் கோரியது.
அதனை ஏற்றுக்கொண்டு, நீதிபதி அத்தண்டனையை விதித்தார்.
எந்தவொரு சமயத்தையும் இழிவுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது; அதுவும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் மனம் புண்படும் படி இப்படி நடந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
கைதான நாளிலிருந்து இந்த 9 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.



