மலாக்காவில் சட்டவிரோத மின்சாதன கழிவுகளைச் சேமித்த நிறுவனத்திற்கு RM25,000 அபராதம்

மலாக்கா, நவம்பர் 20 – ஆயர் கெரோ நீதிமன்றம், அனுமதி இல்லாமல் மின்சாதன கழிவுகளைச் சேமித்து வைத்திருந்த நிறுவனம் ஒன்றிற்கு 25,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட போது, அந்நிறுவன மேலாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியது.
கடந்த மார்ச் 14 ஆம் தேதியன்று JAS அதாவது சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் புக்கிட் ரம்பாய் தொழிற்துறை பகுதியில் உள்ள நிறுவன வளாகத்தில் சோதனையை மேற்கொண்டபோது, சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுமதி இல்லாமல் மின்சாதன கழிவுகளை வெளியேற்றி இருப்பது தெரிய வந்துள்ளதென்று மலாக்கா சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ரோஸ்லி முஸ்தபா (Rosli Mustafa) கூறினார்.
JAS அதிகாரிகளின் வாதங்கள் மற்றும் குற்றவாளியின் வாக்குமூலத்தை நன்கு பரிசீலித்த நீதிமன்றம், அந்நிறுவனத்தின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கு சுற்றுச்சூழல் தரநிலைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



