
மலாக்கா, ஜூலை 16 – மலாக்கா, தாமான் டெக்னோலோஜி செங்கில்
( Taman Teknoloni Cheng ) விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையிலிருந்து 105,300 ரிங்கிட் மதிப்புள்ள 351 போலி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அசல் துப்பாக்கியைப் போன்ற தோற்றத்தில் இருந்த அந்த போலி துப்பாக்கிகள் அக்கடையின் பின்பகுதியிலுள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததை மலாக்கா போலீஸ் குழுவின் அனுமதி அமலாக்க பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சுகைரி மொக்தார் (Dzukhairi Mukthar) தெரிவித்தார்.
அந்த கடையின் உரிமையாளர் கடந்த ஒரு ஆண்டு காலமாக தனது லைசென்ஸையும் புதுப்பிக்கவில்லை. அக்கடையில் பரிசோதனை நடத்துவதற்காக சென்ற போலீஸ் குழுவினர் அங்கிருந்த அனைத்து போலி துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ததோடு , அக்கடையை கவனித்து வந்த உள்நாட்டைச் சேர்ந்த 42 வயது ஆடவரையும் கைது செய்தனர்.
வட மாநிலத்திலிருந்து இந்த போலி துப்பாக்கிகளை பெற்றதோடு இணையம் மற்றும் நேரடியாக அதனை விற்பனை செய்து வந்ததை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Dzukhairi Mukthar இத்தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் மலாக்கா போலீஸ் துணைத்தலைவர் துணைக் கமிஷனர் Ahmad Jefri , மலாக்க தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் கிறிஸ்தோபர் பாதிட் ( Christopher Patit ) ஆகியோரும் கலந்துகொண்டனர்.