
கோலாலாம்பூர், செப்டம்பர்-17 – மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை அண்மையில் இந்திய ஆய்வியல் துறை நூலகம் மற்றும் UM இந்திய பட்டதாரிகள் அமைப்பான CUMIG-க்குடன் இணைந்து, “சினிமாவுக்கு அப்பால்: கலை, சமூகம் மற்றும் படைப்பாற்றல் எதிர்காலங்களை” என்ற பட்டறையை நடத்தியது.
மலாயாப் பல்கலைக் கழகத்தின் பண்டிதர் சாபா ( Za’ba) நினைவு நூலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை அப்பட்டறை நடைபெற்றது.
பல்வேறு விருதுகளைக் குவித்த ‘ஜகாட்’ படப் புகழ் இயக்குநர் சஞ்சய் பெருமாளும், வானொலி அறிவிப்பாளராக இருந்து இன்று IPPTAR எனப்படும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகத்தின் கல்விப் பிரிவுத் தலைவராக உள்ள குமரன் சுப்ரமணியமும் பட்டறையை வழிநடத்தினர்.
இளைஞர்களை கொள்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் வாய்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத்துடன் இணைப்பதன் மூலம் மலேசியாவின் படைப்பாற்றல் துறையை மறுகற்பனை செய்வதை இந்நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த அமர்வு, திரைப்படத் துறையை வடிவமைக்கும் முக்கிய கொள்கைகளை வெளிப்படுத்தும், தொழில்துறைக்குள் தொழில் பாதைகளை முன்னிலைப்படுத்தும் மற்றும் மலேசியப் படைப்புகளின் எதிர்காலத்திற்கான தங்கள் தொலைநோக்குகளை வெளிப்படுத்த இளம் திறமையாளர்களுக்கு ஒரு தளமாக விளங்கியது.
சஞ்சய் பெருமாளும், குமரனும் பட்டறையின் நோக்கம் குறித்தும் பங்கேற்பாளர்கள் கற்றவை குறித்தும் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
மலேசியப் படைப்பாற்றல் துறையின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் மற்றும் பரிமாற்றத்திற்கான ஒரு துடிப்பான இடத்தை உருவாக்கிய இந்நிகழ்வில் பொது மக்கள், இளங்கலை மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
‘ஜகாட்’ படத்திற்குப் பிறகு சஞ்சய் ‘மாச்சாய்’ ‘Blues’ என 2 படங்களை இயக்கியுள்ள நிலையில், Blues படத்தின் முன்னோட்ட காட்சியுடன் பட்டறை நிறைவுப் பெற்றது.