
ஷா ஆலாம், செப்டம்பர்-6 – அடுத்த பொதுத் தேர்தலில் ஏராளமான மலாய்க்காரர் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பல்முனைப் போட்டிகளை தவிர்த்தால், PN எனப்படும் பெரிகாத்தான் நேஷனல் 15 முதல் 22 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கூடுதலாக வெல்ல முடியும் என அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
3% வாக்கு மாற்றமே PN-க்கு கூடுதல் வெற்றியைத் தர முடியும் என்றார் அவர்.
தற்போது PN-க்கு மொத்தம் 68 இடங்கள் உள்ளன; அவற்றில் பாஸ் கட்சி 43 தொகுதிகளையும் பெர்சாத்து 25 தொகுதிகளையும் கொண்டுள்ளன.
இந்நிலையில் பெரிக்காத்தான் “தீவிர மலாய்-முஸ்லீம்” கூட்டணி என்ற கண்ணோட்டத்தை மாற்ற முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
உதாரணத்திற்கு பெர்சாத்துவின் உச்ச மன்றத்தில் மலாய்க்காரர் அல்லாத சிலரும் அங்கம் வகிப்பதை அவர் குறிப்பிட்டார்.
ஆனால் மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற பல ஆண்டுகள் தேவைப்படும் என்பதை அந்த முன்னாள் பிரதமர் ஒப்புக் கொண்டார்.
மலாய்-முஸ்லீம்களிடையே பிரபலமாக இருக்கும் பெரிக்காத்தான், முஸ்லீம் வாக்காளர்களை நெருங்குவதில் சற்று சிரமத்தை எதிர்நோக்கி வருவதும், அதனை களைவதற்கான முயற்சிகள் குறித்தும் முஹிடின் கருத்துரைத்தார்.