ஈப்போ, நவம்பர்-9,மலாய் ஆட்சியாளர்கள் குறித்துக் கேள்வி எழுப்புவோரையும் இன-மத விவகாரங்களை எழுப்பி குளிர்காய்வோரையும் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா கடிந்துகொண்டுள்ளார்.
அது போன்ற, வரலாறு புரியாமல் பேசுவோர், கலாச்சாரத்தைப் புறக்கணிப்போர், தேசிய நாகரிகத்தை மறப்போரின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.
தனது 68-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விருதுகளும் பட்டங்களும் எடுத்து வழங்கிய நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது, சுல்தான் நஸ்ரின் அதனை சுட்டிக் காட்டினார்.
சம்பந்தப்பட்டோர், இன-மத விவகாரங்களை தொடர்ந்து அரசியலாக்கி, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர்.
அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு மக்களின் ஒற்றுமையைப் பணயம் வைக்கின்றனர்.
அது போன்ற பிற்போக்குச் சிந்தனையுடையவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மாறாக, எந்தவொரு பாகுபாடுமின்றி சந்தேக கண்ணோட்டமுமின்றி பல்லின மக்களை அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவம் தேவை என்றார் அவர்.
இஃது இப்போது கிள்ளி எறியப்படாவிட்டால், எதிர்கால தலைமுறையும் ஒற்றுமையில்லாமல் பிரிந்தே கிடக்கும் எனச் சுல்தான் நஸ்ரின் எச்சரித்தார்.