அலோர் ஸ்டார், செப்டம்பர் -13 – மலேசியருக்குச் சொந்தமான அனைத்துலகக் கடப்பிதழுடன் ஆள்மாறாட்டம் செய்து இந்நாட்டிலிருந்து வெளியேற முயன்ற இலங்கை ஆடவன் குடிநுழைவுத் துறையிடம் வசமாக சிக்கியுள்ளான்.
21 வயது அவ்விளைஞன் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு மற்றும் சுங்க சோதனைச் சாவடியில் கைதுச் செய்யப்பட்டான்.
முறையான பயணப் பத்திரங்கள் இன்றி அவன் மலேசியாவுக்குள் நுழைந்து தங்கியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
கெடா குடிநுழைவுத் துறையும் தாய்லாந்து குடிநுழைவுத் துறையும் மேற்கொண்ட ஒத்துழைப்பின் வாயிலாக அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் மேற்கொண்டு விசாரிக்க ஏதுவாக, அவ்விளைஞன் தற்காலிகமாம கெடா குடிநுழைவுத் துறையின் அமுலாக்க லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
அவன் பின்னாலிருக்கும் ஆள்கடத்தல் மற்றும் மனித விற்பனை கும்பலை கண்டறிய ஏதுவாக
அச்சம்பவம் விரிவாக விசாரிக்கப்படுமென கெடா குடிநுழைவுத் துறை கூறியது.