மலேசியக் குழந்தைகளைக் கொண்ட வெளிநாட்டினருக்கு விவாகரத்துக்குப் பிறகும் நுழைவு அனுமதி வழங்கப்படலாம் – சைபுதீன்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-20 – மலேசியக் குழந்தைகளைக் கொண்ட வெளிநாட்டினரின் மலேசிய வாழ்க்கைத் துணையுடனான திருமணம் முடிவுக்கு வந்தால், நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க உள்துறை அமைச்சு சிறப்பு அளவுகோல்களைத் தயாரித்து வருகிறது.
மலேசியர்களை மணந்த குடிமக்கள் அல்லாதவர்கள் தற்போது நீண்டகால சமூக வருகை அட்டையைப் பெறலாம்; இது அவர்கள் மலேசியாவில் வசிக்கவும் பின்னர் PR எனப்படும் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கிறது என அமைச்சர் டத்தோ ஸ்ரீ Saifuddin Nasution Ismail கூறினார்.
இருப்பினும், மரணம் அல்லது விவாகரத்து காரணமாக திருமண பந்தம் முடிவுக்கு வந்தால், இந்த அட்டை செல்லுபடியாகாது.
எனவே தான், மலேசியக் குடியுரிமை பெற்ற குழந்தைகளைக் கொண்ட மலேசியர் அல்லாத முன்னாள் மனைவிகள் அல்லது கணவர்களுக்கான நுழைவு அனுமதிக்கு சிறப்பு அளவுகோல்களை அமைச்சு தயாரித்து வருகிறது.
இது, குடும்பக் கட்டமைப்பை ஆதரிப்பதையும் மலேசியர் அல்லாத பெற்றோர்கள் தங்கள் மலேசிய குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது என Saifuddin சொன்னார்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அவர் அதனைக் கூறினார்.
இது தவிர, 2013 முதல் 2023 வரை சமர்ப்பிக்கப்பட்டு இன்னமும் நிலுவையில் உள்ள 19,205 நுழைவு அனுமதி விண்ணப்பங்களை அங்கீகரிப்பது உட்பட பிற நடவடிக்கைகளையும் அமைச்சு செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே சமயம் இது தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் ஆறு மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவுச் செய்யும் வகையில்
செப்டம்பர் 1 முதல் புதிய SOP நடைமுறைகள் செயலாக்கம் காணும் என்றும் அவர் சொன்னார்.