
கோலாலம்பூர், ஜனவரி-27 – சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் முயற்சியில் மலேசிய இந்துக்களின் கனவுத் திட்டம் நனவாகி வருகிறது.
ஆம், மலேசியாவின் முதல் இந்து சமயக் கல்லூரி சிலாங்கூர் மாநிலத்தின் பெர்லிங் பட்டணத்தில் உருவாகி வருகிறது.
அறவாரியத்துக்குச் சொந்தமான 7.49 ஏக்கர் நிலத்தில் சிலாங்கூர் மாநில அரசின் அங்கீகாரத்துடன் அது அமைகிறது.
சிவன் கோயில், சமயக் கல்லூரி, மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அவ்வளாகம் உட்படுத்தியிருக்கும்.
மலேசிய இந்துக்களுக்கு முறையான சமயக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள், கோயில் குருக்கள், ஓதுவார்கள், சமயப் பணியாளர்கள் ஆகியோரை உருவாக்குவதே அதன் நோக்கமாகும்.
இந்நிலையில் வரும் மே 10-ஆம் தேதி அறவாரியத் திட்டங்களுக்கு நிதித் திரட்டும் நோக்கில் ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதற்கு முன்னோட்டமாக நேற்று நடைபெற்ற தேநீர் விருந்தில் அறவாரியத்தின் அறங்காவலர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்ட 60 பேர் பங்கேற்றனர்.
நல்லுள்ளம் கொண்ட இந்துக்களும் நன்கொடையாளர்களும் கல்லூரி அமைவதற்கும் சமய அறிவு வளர்வதற்கும் காணிக்கையை வழங்குவர் என எதிர்பார்ப்பதாக, அறவாரியத்தின் இயக்குநர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கூறினார்.
சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் மனமுவந்து உதவ வேண்டுமென, அறவாரியத்தின் அறங்காவலரான Dr பழனியப்பன் எட்டி கவுண்டர், பொன் தேன் செல்வ நாகப்பன் கேட்டுக் கொண்டனர்.