
லண்டன், நவம்பர்-20 – மலேசிய வரலாற்றில் ஒரு முக்கியச் சாதனையாக, பேராக்
சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத்தைச் சேர்ந்த 44 வயது Dr ஜெயபிரகாஷ் முரளிதரன், நாட்டின் முதல் மற்றும் ஒரே Atmospheric Scientist அதாவது வளிமண்டல விஞ்ஞானியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் அரசாங்கத்தின் பிரசித்திப் பெற்ற Chevening கல்வி உபகாரச்சம்பளம் பெற்ற அவர், உலகின் முன்னணி பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜில் வளிமண்டல அறிவியலை முதன்மைப் பாடமாகக் கொண்டு வேதியியல் துறையில் அண்மையில் PhD பட்டம் பெற்றார்.
முனைவர் பட்டத்திற்கான அவரின் ஆராய்ச்சி மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் சவால்கள், எல்லை தாண்டிய புகைமூட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
நாடு திரும்பியதும்,
புகைமூட்ட முன்னறிவிப்புக்கான மலேசியாவின் முதல் AI- அடிப்படையிலான கருத்துருவின் சான்று கருவியையும் ஜெயபிரகாஷ் முன்மொழிந்துள்ளார்.
எல்லை தாண்டிய புகைமூட்டத்தை அதிகாரிகள் முன்கூட்டியே அடையாளம் கண்டு அவற்றின் தாக்கத்தைக் குறைக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம், தூய்மைக்கேடு போன்ற முக்கியமான இயற்கைச் சூழல் சவால்களை எதிர்கொள்ள மலேசியா கொண்டுள்ள திறனை அவரது சாதனை மேலும் வலுப்படுத்துகிறது.
ஜெயபிரகாஷின் இந்த வரலாற்றுப் பூர்வ சாதனை, மலேசிய அறிவியல் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளது.
அவர் தற்போது மலேசியாவில் PTD எனப்படும் நிர்வாக மற்றும் தூதரக சேவை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
தோட்டப்புறச் சூழலில் இருந்து வந்த தமக்கு Cambridge வாய்ப்பெல்லாம் எட்டாக்கனி என்றே நினைத்திருந்ததாகவும், ஆனால் தொட முடியாதது எதுவுமில்லை என்ற தனது தந்தை முரளிதரனின் தாரக மந்திரமே இன்று தன்னை இந்த உயரத்தில் நிறுத்தியிருப்பதாகவும் அவர் நெகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் ஏராளமான ஜெயபிரகாஷ்கள் நம்மில் உருவாக இவரின் சாதனை தூண்டுகோலாக இருக்கும் என நம்புவோம்…



