
கோலாலம்பூர், மார்ச்-9 – நுரையீரல் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கடுமையான சுவாச தொற்று நோயான நிமோனியா, மலேசியாவில் சான்றளிக்கப்பட்ட இறப்புகளுக்கு தற்போது முக்கியக் காரணமாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் பருவகால காய்ச்சல் உலகளாவிய சுகாதார கவலையாக உள்ளது.
இது ஆண்டுதோறும் குறைந்தது ஒரு பில்லியன் மக்களைப் பாதிப்பதாக, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
2023-ல் ஏற்பட்ட 196,965 இறப்புகளில் 60.7 விழுக்காடு மருத்துவ ரீதியாக சான்றளிக்கப்பட்ட இறப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; 39.3 விழுக்காடு, மருத்துவ ரீதியாக சான்றளிக்கப்படாதவை.
சான்றளிக்கப்பட்ட இறப்புகளைப் பொறுத்தவரை, நிமோனியா முக்கியக் காரணமாக உள்ளது; 18,181 பேர் அல்லது 15.2 விழுக்காட்டு இறப்புகளை அது உட்படுத்தியுள்ளது.
இன்ஃப்ளூவென்சா மற்றும் கோவிட்-19 போன்ற சுவாசக் கிருமிகள் அதிகரித்து வருவதால், மக்கள் நிமோனியாவால் அதிகம் பாதிக்கப்படுவதாக, SMCV எனப்படும் சன்வே மருத்துவ மைய வேலாசிட்டி ஆலோசகர் Dr நூருல் யாகீன் முகமட் இசா கூறுகிறார்.
மலேசியாவின் வயதான மக்கள் தொகை, மருத்துவ உதவியை நாடுவதில் தாமதம் மற்றும் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் ஆகியவை, இங்கு நிமோனியா தொடர்பான இறப்புகளின் அதிகரிப்புக்குக் காரணம் என்றார் அவர்.
நிமோனியாவால் சுவாசப் பிரச்னை, ஆக்ஸிஜன் அளவு குறைதல் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்; கைமீறிய சம்பவங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும் சாத்தியமான சிக்கல்களும் உண்டு.
முதியவர்களே அதிக ஆபத்தில் இருந்தாலும், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு, நாள்பட்ட நோய்கள் அல்லது மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட இளையோரும் பாதிக்கப்படக்கூடியவர்களே.
குறிப்பாக, அண்மைய ஆண்டுகளில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் நிமோனியா பாதிப்புகள் பெரும்பாலும் சுவாசக் கிருமிகளாலும், புகைபிடித்தல் மற்றும் வேப்பிங் ஆகியவற்றாலும் ஏற்படுவதாக, பெர்னாமாவிற்கு அளித்த பேட்டியில் Dr நூருல் கூறினார்.