
மலேசியாவில் மாஃபியா பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மிகவும் துணிச்சலாகவும் , வெளிப்படையாகவும், மீண்டும் மீண்டும் நிகழ்வது கவலையை ஏற்படுத்தியுள்ளன.
அற்பமான வழக்குகளைத் தொடர்வதிலும், சாதாரண குடிமக்களைக் கைது செய்வதிலும் மட்டுமே மும்முரமாக போலீஸ்துறை இருக்கிறதா அல்லது திட்டமிட்ட ஆயுதமேந்திய குற்றங்கள் சுதந்திரமாக நடமாடும் அதே வேளையில் அவர்கள் அரசியல் கருவிகளாக மாறுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக பெர்செகுத்துவின் உதவித் தலைவரும் பெர்சத்து கட்சியின் தலைமைத்துவ மன்ற உறுப்பினருமான டத்தோ Sri Sanjeevan சாடியுள்ளார்.
பட்டப்பகலில், பொது இடங்களில், பயமின்றி நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் . மலேசியாவில் மேற்கொள்ளப்படும் இந்த புதிய பாணியிலான வன்முறை கலாச்சாரம் கண்டிக்கத்தக்க ஒன்று என சஞ்ஜீவன் தெரிவித்தார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சரும் போலீசாரும் இப்போது என்ன செய்கின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உண்மையில் மலேசியாவில் அண்மையக் காலமாக நடைபெறும் சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட வன்முறையை தடுக்கத் தவறியதற்காக உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டியோன் பதவி விலக வேண்டும் என சஞ்ஜீவன் கோரிக்கை விடுத்தார்.
ஆயுதக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து தெளிவான மற்றும் உண்மையான விளக்கத்தை போலீஸ்துறை வழங்க வேண்டும். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டும்.
அப்படி நடக்காத பட்சத்தில், நாட்டின் சட்டவிதிகள் குறித்து குற்றவாளிகள் அச்சம் அடையும் போக்கை ஏற்படுத்துவதில் , உள்துறை அமைச்சு, போலீஸ் படைத் தலைவர் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் தவறினால் கௌரவமாக அவர்கள் பதவி விலகுவதே சரியான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என சஞ்ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.



