
சைபர்ஜெயா, செப்டம்பர் 9 – சாலை விபத்துகள், பொருட்கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற எல்லைத் தாண்டிய குற்றங்கள் சார்ந்த விசாரணைக்கு உதவுவதற்கு மலேசியாவில் முதல் வாகன தடயவியல் (Forensic) ‘மொபைல்’ ஆய்வகம் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த மொபைல் ஆய்வகம் நாட்டின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சியை நிச்சயமாக ஊக்குவிக்கும் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.
இந்த மொபைல் வாகன ஆய்வகம், வாகன தரவு மீட்பு, விபத்து தரவு பகுப்பாய்வு, டாஷ்காம் பதிவுகளைப் பாதுகாப்பது, வீடியோ காட்சியிலிருந்து வேகத் தரவு ஆராய்ச்சி, வாகன அமைப்புகளின் சைபர் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வாகன கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளது.
சாலை விபத்துகள் மட்டுமல்லாமல், வாகனங்களை பயன்படுத்தி நடைபெறும் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் எல்லைத் தாண்டிய குற்றச் செயல்களில் விசாரணை மேற்கொள்வதற்கும் இந்த ஆய்வகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உதவும்.
இம்முயற்சி, மலேசிய சாதனை புத்தகத்தின் மூலம் நாட்டின் முதல் மொபைல் தடயவியல் ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இந்த மொபைல் வாகன தடயவியல் சேவையை பயன்படுத்த விரும்பினால், தங்கள் கோரிக்கையை dfd@cybersecurity.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.