
கோலாலம்பூர், செப்டம்பர்-19,
விலைகளைப் பற்றி கவலைப்படாமல் iPhone விவேகக் கைப்பேசிகள் மீது உலக மக்களிடையே காணப்படும் ஆர்வமும் ஈர்ப்பும் ஒரு தனி சுவாரஸ்யம் தான்.
ஒவ்வொரு முறையும் புதியப் பதிப்பு வெளியிடப்படும் போது, iPhone அபிமானிகள் முண்டியடித்து முன்பதிவு செய்வதும், நேரில் வாங்க கால்கடக்க காத்திருப்பதும் கண்கூடு.
இதில் மலேசியாவும் விதிவிலக்கல்ல என்பது, Apple நிறுவனத்தின் புதிய iPhone 17 தொடர் இன்று அதிகாரப்பூர்வமாக இங்கு அறிமுகமான போது மீண்டுமொரு முறை நிரூபணமானது.
நாட்டின் முதல் Apple Store அமைந்துள்ள The Exchange TRX-ல் காலையிலேயே விற்பனை சூடுபிடித்து பரபரப்பு தொற்றிக் கொண்டதை வைரலான வீடியோக்களில் காண முடிந்தது.
காலை எட்டு மணிக்கு தான் கதவுகள் திறக்கப்படும் என்றாலும், 7.30 மணிக்கெல்லாம் சுமார் 200 பேர் வரிசையில் காத்திருந்தனர்.
சிலர் நள்ளிரவே அங்கு வந்து முகாமிட்டு விட்டனர்; மணிக் கணக்கில் காத்திருந்தாலும் முதல் ஆளாக iPhone 17 கைப்பேசியைத் தொட்டு விட வேண்டுமென்ற அலாதி ஆர்வம் அவர்களிடத்தில் இயல்பாகவே தென்பட்டது.
அப்படி முதலாவதாக iPhone 17 Pro Max Cosmic Orange வாங்கியவரும், நள்ளிரவு 12 மணிக்கே வரிசையில் வந்து நின்ற Danial என்பவர் தான்.
அதே சமயம், 2 நாட்களுக்கு முன்பு இதற்கென்றே வங்காளதேசத்திலிருந்து வந்திருந்த Md Tushar Ahmed Hasan என்பவர், அதிகாலை 4 மணிக்கு முன்பே வரிசையில் காத்துக் கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.
கூட்டம் குவியும் என முன்கூட்டியே கணித்ததாலோ என்னவோ, அந்த Apple மையத்தில் வாடிக்கையாளர்களை கவனிக்க ஏராளமானோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டினருக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல, மலேசிய iPhone பிரியர்களும் அதன் மீது பெரும் ஈர்ப்புக் கொண்டிருப்பது விளங்க முடியா ஒரு வினோதம் தான்…