மலேசியாவில் 6 மாநிலங்கள் நிலநடுக்க அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன

கோலாலம்பூர், அக்டோபர் 6- பஹாங், திரங்கானு, பேராக், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய ஆறு மாநிலங்கள் நிலநடுக்க அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை இயற்கை வளங்கள் மற்றும் சூழலியல் நிலைத்தன்மைத் துணை அமைச்சர் ஹுவாங் தியோங் சீ (Huang Tiong Sii) தெரிவித்தார்.
மலேசிய கனிமவியல் மற்றும் புவியியல் துறையின் (JMG) செயலியில் உள்ள பிளவுக் கோடுகள் வரைபட ஆய்வுகள் மற்றும் புவிசார் புள்ளி வரைபட அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து, நிலநடுக்க அபாய வரைபடம், வானிலைத் துறை (MetMalaysia) மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் சமீபத்திய நில அதிர்வுகளும், புதிய பிளவுக் கோடுகளின் தகவல்களும் இதில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்றும் அறியப்படுகின்றது.
செகமாட் மற்றும் பத்து பகாட் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வுகள் பழமையான பிளவுக் கோடுகளில் தேங்கியிருந்த ஆற்றலை வெளிப்படுத்தும் இயல்பான செயல்முறையாகும் என்றும், அந்த பகுதிகள் இன்னும் பாதுகாப்பானவையாக உள்ளன என்றும் அவர் மேலும் விளக்கினார்.
இந்நிலையில் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், RMK-13 திட்டத்தின் கீழ் 12 நில அதிர்வு நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.