
மலேசியா அமைதிப் பூங்காவாகத் தொடர வேண்டும், சட்டத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்: அன்வார் வலியுறுத்தல்
தம்புன், பிப்ரவரி-15,
மலேசியா அமைதிப் பூங்காவாகத் தொடர வேண்டும், சட்டத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிறகு, அன்வார் தனது ஃபேஸ்புக் பதிவில் அவ்வாறுக் கூறினார்.
நாட்டுப் பிரச்னைகள் மதியும் மரியாதையும் கொண்டு தீர்க்கப்பட வேண்டும், மோதலால் அல்ல என்றார் அவர்.
அனுமதிப்பெறாத வழிபாட்டுத் தலங்கள் போன்ற சிக்கல்கள் துணிச்சலுடனும், விவேகத்துடனும், உறுதியுடனும் கையாளப்படும் என்றும், அதே நேரத்தில் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
மடானி அரசின் கீழ் பல பழைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அன்வார், நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையும் நிலைத்தன்மையும் அவசியம் என வலியுறுத்தினார்.
தனது தம்புன் நாடாளுமன்றத் தொகுதிக்கு மேற்கொண்ட வருகையின் ஒரு பகுதியாக பிரதமர் உள்ளூர் மக்களுடன் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.



