
கோலாலம்பூர், ஏப்ரல்-9, அமெரிக்கப் பொருட்களுக்கு மலேசியா 47 விழுக்காட்டு வரியை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளதை அரசாங்கம் மறுத்துள்ளது.
அது உண்மையான கணக்கல்ல என, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்கா அறிவித்துள்ளது அதன் ‘சொந்த’ கணக்காகும்.
அதாவது, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை வைத்து அமெரிக்கா சொந்தக் கணக்குப் போட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அமெரிக்கா மலேசியாவிலிருந்து 52.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது; அதே சமயம் 27.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்தது.
இந்த ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம் அல்லது வர்த்தகப் பற்றாக்குறையானது 24.8 பில்லியன் டாலராகும்.
அத்தொகையை, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பான 52.5 பில்லியன் டாலரோடு வகுத்தால், 0.47 அல்லது 47% வருகிறது.
அதைத் தான் அமெரிக்கா, மலேசியா விதிக்கும் வரி விகிதமாகக் கூறி வருவதாக தெங்கு சஃப்ருல் சொன்னார்.
அமெரிக்கா போடும் இந்த கணக்குக்கும், உண்மை வரி விகிதத்திற்கும் சற்றும் தொடர்பில்லை என்றார் அவர்.
அமெரிக்கா முன்வைக்கும் மற்றொரு வாதம், 47 விழுக்காட்டிலேயே வரி விகிதத்தை நிலை நிறுத்தி, அதில் 50% கழிவை மலேசியா தர வேண்டுமென்பதாகும்.
அப்படி 50% கழிவு வழங்கினால் அமெரிக்கா 24% வரியை மட்டுமே செலுத்த வேண்டி வரும்; எனவே தான் மலேசியாவுக்கும் பரஸ்பர வரியாக 24% -டை அறிவிப்பதாக டிரம்ப் கூறிக் கொண்டுள்ளார்.
உண்மையில், அமெரிக்கப் பொருட்களுக்கு மலேசியா விதிக்கும் சராசரி வரி விகிதம் 5.6% மட்டுமே; இன்னும் சொல்லப் போனால மலேசியா வந்திறங்கும் ஏராளமான அமெரிக்கப் பொருட்களுக்குன் அறவே வரி விதிக்கப்படுவதில்லை என தெங்கு சஃப்ருல் சுட்டிக் காட்டினார்.
ஆக, உண்மையிலேயே அமெரிக்கா நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமென்றால், அந்த 5.6 விழுக்காட்டில் பாதியான 2.8 விழுக்காட்டைத் தான் அது பரஸ்பர வரியாக விதிக்க வேண்டும்; மாறாக 24 விழுக்காடு அல்ல என, facebook-கில் பதிவேற்றிய வீடியோவில் அமைச்சர் விளக்கினார்.