பினாங்கு, டிசம்பர் 31 – மலேசிய சிலம்ப அணி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் 12 தங்கப்பதக்கங்களை வென்று, முழுமையான சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஆறு தேசிய வீரர் விராங்கனைகள்தான் இச்சாதனை பதக்கங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றியவர்களாவர்.
இந்நிலையில், பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில், அச்சிலம்ப அணி வீரர்கள் வருகைதந்த போது, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என்.ராயர், செனட்டர் லிங்கேஸ்வரன் மற்றும் பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன் உள்ளிட்டோர் வருகையளித்து தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த சாதனை, பாரம்பாரிய இந்திய கலை சிலம்பத்தை உலகளாவிய விளையாட்டாக உயர்த்தியுள்ளதற்கு சான்றாகுமென செனட்டார் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், சிலம்பத்தை பள்ளி பாடத்திட்டங்களின் ஒரு பகுதியாகச் சேர்க்க பரிந்துரைத்த அவர், இது எதிர்காலத்தில் அனைத்து சமூகங்களுக்கும் இக்கலையை கற்றுக்கொண்டு, மரபினை மதிக்க உதவும் என்றார்.
இந்த வெற்றி, இந்திய பாரம்பரிய கலைக்கான பெருமையை உலக அளவில் பரப்பியதோடு, அடுத்த தலைமுறையினருக்கு பெருமிதம் அளித்து, பாரம்பரிய கலைக் கற்றலில் ஊக்கமளித்திருக்கிறது.