
கோலாலம்பூர், பிப்ரவரி-27 – B40 மற்றும் M40 பிரிவைச் சேர்ந்த இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான MICEP எனப்படும் மலேசிய இந்தியச் சமூகத்துக்கான தொழில் முனைவோர் திட்டத்தை, மித்ரா தொடங்கியுள்ளது.
தேசியத் தொழில்முனைவோர் கழகமான INSKEN ஒத்துழைப்பிலான இத்திட்டம், சவால்மிக்க வர்த்தக உலகில் போட்டித்தன்மை மிக்க மேலும் ஏராளமான இந்தியத் தொழில்முனைவர்களை உருவாக்க இலக்குக் கொண்டுள்ளது.
அதற்கு 8,395 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவர்களில் 1,200 விண்ணப்பத்தாரர்களுக்கு BMC எனும் வணிக மாதிரி கேன்வஸ் பட்டறையில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த BMC பட்டறையானது, சிறந்த வணிகத் திட்டமிடலுக்கான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதோடு, வணிக அமைப்பின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
ஜோகூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய 6 மாநிலங்களில் கட்டம் கட்டமாக அப்பயிற்சி பட்டறை நடைபெறும்.
இதன் மூலம் 1,200 இந்தியர்கள் பயன்பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் BMC கருத்தரங்கிலிருந்து 450 பேர் தேந்தெடுக்கப்பட்டு, தொழில்முனைவோருக்கான 3 நாள் அடிப்படை பயிற்சி, பொருள் மற்றும் சேவை மேம்பாட்டுக்கான அடிப்படைப் பயிற்சி ஆகியவற்றில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
BMC விண்ணப்பத்தின் அடிப்படையில், பங்கேற்பாளர்களுக்கு 20,000 ரிங்கிட் வரையில் மித்ரா வர்த்தக வளர்ச்சி நிதியும் வழங்கப்படும்.
இது குறித்து மேல் தகவல்கள் பின்னர் மித்ராவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும்.