
கோலாலம்பூர், அக்டோபர்- 27,
மலேசியாவில் உள்ள ஒரு போக்கேமோன் (Pokémon) ரசிகர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் சேகரித்த போக்கேமோன் கார்டுகளை மொத்தம் 1.87 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்றதன் மூலமாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றார்.
தமிரால் இம்ரான் என்ற பெயர்கொண்ட அந்நபர் இதற்கு முன்னதாக தனது சேகரிப்பை ஒரு Porsche 911 Carrera 4S கார் மற்றும் 1 மில்லியன் ரிங்கிட் பணத்துடன் பரிமாற்றம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஷா ஆலாம் நகரிலுள்ள தனது சிறிய அறையில் இருந்து தொடங்கிய இந்த ஆர்வம், இப்போது உலகப் போக்கேமோன் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது.
வலைத்தளத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில், வண்ணமயமான போக்கேமோன் கார்டுகள் நிறைந்த பெட்டிகள் அறையின் மேல்தளம் வரை அடுக்கப்பட்டு காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
போக்கேமோன் கார்டுகள் முதன்முதலில் ஜப்பானில் 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இன்றுவரை, உலகளாவிய அளவில் சில அரிய பதிப்புகள் கோடிக்கணக்கான மதிப்பில் சர்வதேச ஏலங்களில் விற்கப்பட்டு வருகின்றன.



