
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – கடந்த மாத இறுதியில் நடந்த ஒரு சம்பவத்தின் போது வானில் துப்பாக்கி சூடு நடத்தியதாக இன்று கோலா சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை குத்தகையாளர் ஒருவர் மறுத்தார்.
55 வயதுடைய அந்த ஆடவர் மீது மாஜிஸ்திரேட் இப்ராஹிம் குலாம் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் பெஸ்தாரி ஜெயாவில், புக்கிட் படோங் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோவிலில் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்பட்டது.
1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 39 ஆவது பிரிவின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. மேலும் அதே சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ஓர் ஆண்டுவரை சிறைத்தண்டனை, 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம்.
அந்த குத்தகையாளருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2,500 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 7ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.