
கோத்தா பாரு, ஏப் 13 – கிளந்தான் – தாய்லாந்து கோலோக் ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள சட்டவிரோத வழித்தடங்களை பயன்படுத்துவதற்கான எல்லை தாண்டிய தடை, மாணவர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்று கிளந்தான் போலீஸ் உறுதிப்படுத்தியது.
இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் எவரும் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மமாட் (Mohd Yusoff Mamat ) தெரிவித்தார் சட்டவிரோத வழித்தடங்களை மூடும் நடவடிக்கை ஒரு ஆண்டுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான சட்டத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எல்லையைக் கடக்க விரும்பும் மாணவர்கள், பள்ளிப் பிள்ளைகள் உட்பட, அனைவரும் குடிநுழைவு வளாகத்தில் சுங்க, தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு மையத்திலுள்ள வழித்தடத்தை பயன்படுத்த வேண்டும்.
ரந்தாவ் பாஞ்சாங்கில் தாய்லாந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் பிரச்னையும் தீர்க்கப்பட்டுள்ளது.
எனவே ரந்தாவ் பாஞ்சாங்கில் பள்ளிக்குச் செல்வதற்காக, சுங்கை கோலோக்கில் உள்ள சட்டவிரோத வழித்தடத்தை பயன்படுத்த இனி எந்தக் காரணமும் இல்லையென முகமட் யூசோப் விவரித்தார்.
இந்த எச்சரிக்கையை மீறி சட்டவிரோதமாக வழித்தடங்கள் மூலம் எல்லையைக் கடப்பவர்கள் தடுத்துவைக்கப்பட்டு 1959/63 குடிநுழைவுத் சட்டத்தின் பிரிவு 5(2)-இன்கீழ் விசாரிக்கப்படுவார்கள்.



