
கலிஃபோர்னியா, ஜூலை-24- ஹோலிவூட் திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக வலம் வந்த வில் ஸ்மித்தின் (Will Smith) தற்போதைய நிதி நிலைமை, சொத்துக்களை விற்கும் அளவுக்கு மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது.
திரையுலகில் ஏற்ற இறக்கம் சகஜம் என்றாலும், உலகின் பெரும் பணக்கார நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த வில் ஸ்மித்தின் இந்நிலை இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வருமான சரிவால், கைவசம் இருக்கும் சொத்துகளை வில் ஸ்மித்தும் அவரின் மனைவியும் நடிகையுமான ஜடா பிங்கட் ஸ்மித்தும் (Jada Pinkett Smith) விற்று வருகின்றனர்.
மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாததால் Maryland பண்ணை வீட்டின் 5 படுக்கையறைகளை 795,000 டாலருக்கு விற்றிருப்பதும் அதிலடங்கும். முன்னதாக Woodlands Hill வீட்டையும் 2 மில்லியன் டாலருக்கு விற்க அவர்கள் முன்வந்தனர்.
பரந்து விரிந்த சொத்துக்களை நிர்வகிக்கும் செலவுகள் எக்கச்சக்கமாக எகிறியதால், வில் ஸ்மித்தின் பல மில்லியன் டாலர் நிகர மதிப்பு படு வீழ்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்தே வேறு வழியின்றி சொத்துக்களை விற்கும் அளவுக்கு அத்தம்பதி சென்றுள்ளனர்.
நடப்புச் சூழலில் தினசரி சொகுசு வாழ்க்கை இனியும் அவர்களுக்கு சரிபட்டு வராது; இந்த நிதிச் சவால்களிலிருந்து வெளியேறுவது அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கலாம் என விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
2022 ஆஸ்கார் விருதளிப்பு மேடையில் தனது மனைவியின் முடி குறித்து கிண்டலடித்ததால், நகைச்சுவையாளர் Chris Rock-கின் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்த சம்பவத்திற்குப் பிறகு அவரின் இறங்குமுகம் தொடங்கியது.
10 ஆண்டுகளுக்கு ஆஸ்கார் விருதளிப்பில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டதோடு, பட வாய்ப்புகளும் அதன் மூலம் செல்வாக்கும் குறையத் தொடங்கியது.