கோலாலம்பூர், ஜனவரி-4, வீட்டுக் காவல் உத்தரவு தொடர்பில் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக புத்ராஜெயாவில் திங்கட்கிழமை நடத்தவிருந்த பேரணியை அம்னோ இரத்துச் செய்துள்ளது.
அரச மன்னிப்பு விஷயத்தில் முறையான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று அறிக்கை வெளியிட்டதை மதித்து, தாங்கள் அம்முடிவுக்கு வந்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
அம்னோ ஒருபோதும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படாது.
எனவே மாமன்னரின் அறிக்கையை ஏற்றும், தேசியப் போலீஸ் படைத் தலைவரின் அறிவுரையை மதித்தும் ஜனவரி 6 பேரணியைத் தொடருவதில்லை என முடிவு செய்யப்பட்டதாக Asyraf சொன்னார்.
முன்னதாக இஸ்தானா நெகாரா வெயிட்ட அறிக்கையில், அரச மன்னிப்பு வழங்கவோ தண்டனையைக் குறைக்கவோ மாமன்னருக்கு இருக்கும் அதிகாரத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், சிறைக் கைதிகள் அதற்கு அரச மன்னிப்பு வாரியத்திடம் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டுமே தவிர மற்ற வழிகளில் அல்ல என்றும் சுட்டிக் காட்டியிருந்தது.
பின்னர் IGP தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன், அரண்மனையின் உத்தரவை மதித்து யாரும் திங்கட்கிழமை அப்பேரணியில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார்.
200 பேருந்துகளில் அம்னோ மற்றும் பாஸ் கட்சி ஆதரவாளர்கள் புத்ராஜெயாவுக்குப் படையெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
SRC வழக்கில் தனது எஞ்சிய சிறைக்காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அதனை அமுல்படுத்த அரசாங்கத்தை நீதிமன்றம் கட்டாயப்படுத்த வேண்டுமென்றும் நஜீப் வழக்குத் தொடுத்திருந்தார்.
அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து நஜீப் செய்த மேல்முறையீட்டின் தீர்ப்பு தான் திங்கட்கிழமை வரவிருக்கிறது.